
யாழில் தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுச் சூழலை விரைந்து சுத்தப்படுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், “பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடிக் குவளைகள் மற்றும் இதர குப்பை கழிவுகளை உரிய முறையில் தரம்பிரித்து அகற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் வீட்டுச் சூழலில் வெற்று கொள்கலன்களில் நீர் தேங்கி நுளம்பு பெருகாமல் பார்த்துக்கொள்வது தங்கள் பொறுப்பும் கடமையுமாகும்.
டெங்கு நோய்த்தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளில் உள்ள நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கு மாநகரசபையின் வழமையான வட்டார திண்மக் கழிவகற்றல் நடைமுறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இக்கொள்கலன் கழிவுகளை வட்டார ரீதியாக அகற்றுவதற்கு விசேட ஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் தங்களின் வீட்டின் முன்புறம் பிரதான நுழைவாயில் உட்பட சுற்றுச் சூழலில் உள்ள புல், பூண்டுகளையும் தாங்களே அகற்றி சுத்தப்படுத்தி டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் துப்பரவு செய்துகொள்ளுமாறு இத்தால் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
மாநகர சுகாதாரப் பிரிவினர் மற்றும் சுற்றாடற் பொலிஸ் பிரிவினர் தங்கள் வீடுகளை பரிசோதிக்க வருகின்றபோது மேற்படி விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்படும்.
அச்சமயம் தங்கள் வீடுகளில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, வீட்டின் பிரதான நுழைவாயில் மற்றும் சுற்றுச் சூழல் சுத்தமாக காணப்படாவிட்டாலோ உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மனவருத்தத்துடன் முற்கூட்டியே அறியத்தருகின்றேன்” என மேலும் தெரிவித்துள்ளார்
Leave a Reply