
வவுனியா அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர் மத்தியில் நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்ற பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வவுனியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை அவதானித்தார்.
அத்துடன், வவுனியா தனியார் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச பேருந்து ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் எதிர்கொள்கின்ற நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் கேட்றிந்த கொண்டார்.
இதன்போது, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதையடுத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கிடையிலான நேர அட்டவணையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு தரப்பினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தனியார் போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகள், இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அனைத்து தரப்பினதும் கருத்துக்களை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் பிரச்சினைகளை அணுகினால் அனைத்தையும் சுமூகமாக தீர்க்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை இதுதொடர்பான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
Leave a Reply