
பொலிவுட்டின் வெற்றி நாயகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் கடவுச்சீட்டுதான் இந்தியன் என்ற பெயரைத் தருமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் அக்ஷய் குமார் வாக்களிக்கவில்லை. அதற்கு அவரது கனடா குடியுரிமையே காரணம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பொதுநிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “எனது திரை வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எனது 14 படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தன.
அவ்வளவுதான் நமக்கு இனி இங்கு எதிர்காலம் இல்லை என்று நினைத்தேன். எனது நெருங்கிய நண்பர் ஒருவர் கனடாவில் இருந்தார். இங்கு வா, நாம் இருவரும் சேர்ந்து வேலை செய்வோம் என்றார்.
எனவே கனடா கடவுச்சீட்டை பெறுவதற்கான வேலைகளை ஆரம்பித்தேன். இனி எனக்கு இங்கு வாய்ப்பே கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால் எனது 15-வது படம் வெற்றி பெற்றது. அப்போதிலிருந்து தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றி வருகிறேன்.
எனது கடவுச்சீட்டை மாற்ற வேண்டும் என்றே எண்ணம் வரவில்லை.ஒரு துண்டு காகிதத்தை வைத்துத்தான் எனது தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று வரும்போது அது வலிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply