
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் உட்பட பிரபலமான பலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட தயாராகி வருகிறார். வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில முறை யோசனை முன்வைத்திருந்தார். அந்த பதவியை பெற்றுக்கொள்ள எந்த வகையிலும் தயாரில்லை என முரளி தொடர்ந்தும் கூறிவந்துள்ளார்.
இதன் பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் முரளிதரன் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட தயார் என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பான்மை பலம் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசியல் அணிக்கு கிடைத்துள்ளது. வடக்கு, கிழக்கை தவிர கடந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் நுவரெலியா மாவட்டத்திலேயே வெற்றி பெற்றார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் முத்தையா முரளிதரனை இறக்கி, ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கிக்கு பெரும் அழுத்தங்களை ஏற்படுத்துவதே பொதுஜன பெரமுனவின் தலைவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டகாரர் டி.எம். டில்ஷான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட தயாராகி வருகிறார். அரசியலுக்கு வரப் போவதாக அவர் ஏற்கனவே பல முறை கூறியுள்ளார். இதனடிப்படையில், அவர் எதிர்வரும் பொதுத் தேர்தல் மூலம் செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு வரவுள்ளார்.
இவர்களை தவிர கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு நேரடியான பங்களிப்புகளை வழங்கிய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாிகள், நடிகர், நடிகைகள் என பல கலைஞர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளனர்.
Leave a Reply