மட்டக்களப்பில் தொடரும் மழை: குளங்களின் வான்கதவுகள் மீண்டும் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருப்பதால் நீரை வெளியேற்றுவதற்காக மீண்டும் குளங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவந்த அடைமழை கடந்த வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு தினங்களில் ஓய்ந்திருந்தது. இதனால் தேங்கியிருந்த வெள்ள நீர் மிகவும் வேகமாக கடலைநோக்கி வடிந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று காலை அதிகாலை முதல் மட்டக்களப்பில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் பல கிராமங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் மீண்டும் அவர்களது இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும் குடியிருப்புக்களிலும், கிராமங்களிலுள்ள உள்வீதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதனால் மக்கள் உள்ளூர் போக்குவரத்துக்களிலும், ஏனைய சேவைகளைப் பெற்றுக் கொள்வதிலும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தினுள் இருக்கின்ற கலுகொல் ஓயா குளத்தின் 2 வான்கதவுகள் ஒரு அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. கலுகொல் ஓயா குளத்தின் நீர் மட்டக்களப்பு நவகிரிக் குளத்தில் சேருகின்றது. எனவே, நவகிரிக் குளத்தில் தற்போது 30.7 அடி நீர் நிரம்பியுள்ளது. இக்குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 31 அடி ஆகும்.

தற்போது நவகிரிக் குளத்தின் 2 வான்கதவுள் 5 அடி உயரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக அக்குளத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் பத்மதாசன் தெரிவித்துள்ளார்.

உன்னிச்சைக் குளத்தின் நீர் கொள்ளளவுமட்டம் 33 அடியாகும். தற்போது அக்குளத்தில் 30.2 அங்குலம் அளவில் நீர் உள்ளது.

உறுமாமம் குளத்தின் நீர் கொள்ளளவு 15.8 அங்குலம் ஆகும். தற்போது அக்குளத்தின் நீர்மட்டமும் 15.8 அங்குலம் அளவில் உள்ளது. இக்குளத்தில் தற்போது 2 வான்கதவுகள் 8 அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளன.

வெளிக்காக்கண்டிய குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 15.5 அங்குலம் ஆகும். தற்போது அக்குளத்தில் 15.2 அங்குலம் அளவில் நீர் நிரம்பியுள்ளது.

வாகனேரிக்குளத்தின் மொத்த நீர்மட்டம் 19.7 அங்குலம் ஆகும். தற்போது அக்குளத்தில் 17.3 அங்குலம் அளவில் நீர் நிரம்பியுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் நிரோசன் தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *