
புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டுடன் புகைப்படம் எடுப்பதில் எவ்வித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டிலுள்ள புகைப்படத்தில் முகத்தில் எந்தவிதமான செயற்கை அடையாளங்களும் இருக்க முடியாது. ஆகையால் நெற்றியில் பொட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டி அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்துடன், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் தமிழ் பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். அதாவது பொட்டு உள்ள படத்தை கடவுச்சீட்டில் கொண்டிருக்கும் பெண்கள் சில சந்தர்ப்பங்களில் பொட்டு வைக்காமல் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.
இந்த நெருக்கடியான நிலையால் சில நாடுகளின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நிறுத்தி வைத்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமன்றி குறித்த நாடுகளுக்கான விசாக்களை பெறுவதும் இவர்களுக்கு சவாலாகவே இருக்கின்றன.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் விசாக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே தமிழ் பெண்களின் நன்மை கருதி இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக என குறித்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான உதவிக் கட்டுப்பாட்டாளர் பி.ஜீ.ஜீ.மிலிந்தவிடம் வினவிய போதே அவ்வாறான எவ்வித தடையும் பொட்டு வைக்கும் தமிழ் பெண்களுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 2015ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான புகைப்படம் தொடர்பான சட்டத்திட்டங்களே தற்போது நடைமுறையில் இருக்கின்றன.
அதன்படி கடவுச்சீட்டிலுள்ள படத்தில் முகத்தில் எந்தவிதமான செயற்கை அடையாளங்களும் இல்லாத வகையில் புகைப்படம் அமைய வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகிறது.
என்ற போதிலும் பெண்கள் பொட்டு அணிந்தவாறு புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply