
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு செல்வது எமது நோக்கமல்ல. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனப் பங்கீடு நியாயமானதாக – சரியானதாக அமையவேண்டும். அதனையே கூட்டமைப்பின் தலைவரிடம் நாம் வலியுறுத்தினோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புளொட் மற்றும் ரெலோ கட்சிகள் விலகி தனி வழியில் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் அந்தக் கட்சிகளின் முடிவெடுக்கும் பொறுப்பில் இருப்பவர்களுடன் தொடர்புகொண்டு வினவினோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து உடைத்துக் கொண்டு செல்வது எமது நோக்கமல்ல. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு தொடர்பிலேயே நாம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றுமுன்தினம் அவரது வீட்டில் சந்தித்துப் பேச்சு நடத்தினோம்.
கடந்த காலங்களைப் போன்று ஆசனப் பங்கீட்டு விடயத்தில் இறுதிவரை இழுத்தடித்து எங்களை ஏமாற்றக் கூடாது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்களுக்கு எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை நாம் கோருவோம். எமது நியாயமான கோரிக்கையை இலங்கைத் தமிழரசுக் கட்சி தட்டிக் கழிக்கக் கூடாது.
அவ்வாறு தமிழரசுக் கட்சி செயற்பட்டால், கடந்த காலங்களைப் போன்று நாம் சும்மா இருக்க மாட்டோம்.
நிச்சயமாக மாற்றுவழியில் நாம் தனித்துப் போட்டியிடுவோம். ஆனால், அதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. நிச்சயமாக எமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கின்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply