நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் சிக்கியவர்களில் பிரித்தானியர்கள் எத்தனை பேர்: பிரித்தானிய தூதர் தகவல்!

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் சிக்கியவர்களில் பிரித்தானியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குவர் என்று நியூசிலாந்துக்கான பிரித்தானிய உயர் தூதரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படாவிட்டாலும், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர் ஆணையரான Laura Clarke தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு சொந்தமான White Island என்ற தீவுக்கு சுற்றுலாப்பயணிகள் சுற்றுலா சென்றிருந்தபோது திங்களன்று எதிர்பாராதவிதமாக அங்கிருந்த எரிமலை வெடித்தபோது அங்கு சிக்கிக்கொண்ட 47 பேரில், இந்த இரண்டு பிரித்தானிய பெண்களும் அடங்குவர்.

அந்த 47 பேரில் 34 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பேர் உயிரிழந்துவிட்டார்கள், மேலும் எட்டு பேரைக் காணவில்லை. எரிமலை வெடிப்பில் சிக்கியவர்களில், நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களுடன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா மற்றும் மலேசிய நாட்டு சுற்றுலாப்பயணிகளும் அடங்குவர் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஹெலிகொப்டரில் ஆய்வு மேற்கொண்ட பொலிசார், இதற்கு மேல் தீவில் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

நடந்த இயற்கை சீற்றம் குறித்து நியூசிலாந்து பிரதமரிடம் விசாரித்து அறிந்ததாக தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தொடர்ந்து அவருடன் தொடர்பிலிருப்பதாகவும், அத்துடன் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள் இருவரின் குடும்பத்தாருக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக பிரித்தானிய உயர் ஆணையர் Laura Clarke தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *