
சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக் கிரிக்கெட் அணி, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது.
அதன் முதல் போட்டி இன்று ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணயச்சுழற்சியில் பெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்த வகையில், தொடக்க வீரர்களாக அணித்தலைவர் திமுத் கருணாரட்ன மற்றும் ஒசாத பெர்ணான்டோ ஆகியோர் களமிறங்கினர்.
இவ்விருவரும் முதல் விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், திமுத் கருணாரட்ன 59 ஓட்டங்களுடன் ஷகீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஒஷாட பெர்ணான்டோவும் 40 ஓட்டங்களில் வெளியேற, நீண்ட நாட்களின் பின்னர் அணிக்குத் திரும்பிய முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் களம் புகுந்தார்.
ஆனால், வெறும் இரண்டு ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்து சென்றார். மறுபுறத்தே சற்று நம்பிக்கை அளித்த அனுபவ வீரர் மத்தியூஸூம் 31 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கையணி, தமது முதல் இன்னிங்ஸிற்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.
ஆடுகளத்தில் தனஞ்சய டீ சில்வா 38 ஓட்டங்களுடனும், விக்கெட் காப்பாளர் டிக்வெல்ல 11 ஓட்டங்களுடனும் உள்ளனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் நசீம் ஷா இரண்டு விக்கெட்டுக்களையும், மொஹமட் அப்பாஸ், ஷகீன் அப்டிரி, உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
Leave a Reply