தீவிரமாக பரவும் டெங்கு நோய்: பொதுமக்களை எச்சரிக்கும் வைத்தியர்கள்

ஆள் கொல்லி நோயான டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் ஒவ்வொரு தனி நபருக்கும் கடப்பாடு உள்ளது என கல்முனைப் பிராந்திய தொற்றுநோயியல் வைத்தியர் ஆரிப் தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகளவில் காணப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்,

இந்த காலக்கட்டத்தில் ஏற்படக் கூடிய காய்ச்சலை டெங்கு நோயாக கருத்தில்கொண்டு தம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் ஒவ்வொரு தனி நபருக்கும் கடப்பாடு உள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டால் கட்டாய ஓய்வில் இருத்தல் அவசியமாகும். சிறியவர்களாயினும், பெரியவர்களாயினும் கடின வேலைகளைத் தவிர்த்து ஓய்வு எடுக்கவேண்டியது அவசியமாகும். மாணவர்களை பாடசாலைகளுக்கோ, மேலதிக வகுப்புகளுக்கோ அனுப்புவதைத் தவிர்க்கவும்.

காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் முக்கியமாக நுளம்புக்கடியிலிருந்து தம்மைப் பாதுகாப்பதன் மூலமாக, தமக்கு ஏற்பட்டிருப்பது டெங்கு நோயாயின், அது பிறருக்கும் பரவுவதைத் தடுக்க முடியும். நோயாளியின் இரத்தக் குழாய்களில் உள்ள டெங்கு வைரஸ் கிருமிகளை நுளம்புகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எடுத்துச் செல்கிறது.

காய்ச்சலைக் குறைப்பதற்கு பரசிட்டமோல் தவிர்ந்த வேறு மருந்துகளை (Mefenamic acid, Diclofenac sodium, Aspirin, Ibuprofen ) உட்கொள்ளக்கூடாது. அதனையும், உரிய நேரத்திற்கு உரிய அளவிலேயே எடுக்கவேண்டும். இல்லையேல் அதுவே எமனாகிவிடலாம்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு ஒரு தடவையில் ஒரு கிலோகிராம் உடல் நிறைக்கு 15 மில்லிகிராம் என்ற அளவில் பரசிட்டமோல் மருந்துகள் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு நான்கு தடவைகள், 4-6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை கொடுக்கலாம்.

பொதுவாக, திரவ பரசிட்டமோல் மருந்துகள் 5 மில்லிலிட்டரில் 120 மில்லிகிராம் என்றவாறு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இது தொடர்பில் வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் காலப்பகுதியிலும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தாலும் உடலின் நீர்த்தன்மை குறைவடையும். அத்துடன் பசியின்மையும், நீரருந்த விருப்பமின்மையும் இதனை மோசமாக்கும். எனவே, ஒரு நாளைக்கு எடுக்கவேண்டிய நீராகாரத்தின் பிரகாரம் நீரை அருந்த வேண்டும். வெறுமனே நீரை மாத்திரம் அருந்தாமல், இளநீர், பால், ஜீவனி, பழங்கள் மற்றும் காய்கறிச்சாறு, அரிசிக் கஞ்சி, சூப் போன்றவை சிறந்தது. சிறு குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் போது அடிக்கடி சிறிதளவு குளுக்கோஸ் / சீனி கொடுப்பது நல்லது.

பழுப்பு, கபில அல்லது சிவப்பு நிறத்திலான உணவு மற்றும் திரவ ஆகாரங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பீட்ரூட், நெக்ட்டோ போன்றன. இரத்தக்கசிவு ஏற்படுமாயின் அதனை தவறாக கருத இது இடமளிக்கும்.

வழமையாக கழிக்கின்ற சிறுநீரின் அளவை விடவும், அதாவது போதிய நீராகாரம் எடுத்தும் சிறுநீரின் அளவு குறைவாக இருக்குமாயின், உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும். எனினும், வைத்தியசாலைக்குச் செல்வதே பொருத்தமாகும். குறிப்பாக, குழந்தைகளின் மீது அதிக கவனம் எடுக்கவேண்டும்.

காய்ச்சல் குறைந்திருந்தாலும், குறிப்பாக குழந்தைகள் விடயத்தில் அதாவது, சாப்பிடாமை, சுறுசுறுப்பின்மை, வயிற்றுவலி, தொடர்ச்சியான வாந்தி, உடலில் சிவப்பு நிறப்புள்ளிகள், 6 மணித்தியாலங்களுக்கு மேல் சிறுநீர் கழிக்காமை, பல்முரசு மற்றும் மல,சலத்தினூடாக இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும்.

காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், வைத்திய ஆலோசனையின்படி இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன்படி, செங்குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கை 130000/ml யை விட குறைவாக இருந்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், வீடுகளில் அவசர நேரத்தில் ஆதரவில்லாதவர்கள், போக்குவரத்து வசதி குறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், முன்னரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்குள் பப்பாசி இலைச்சாற்றை எந்தக் காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது. அதுவே எமனாகிவிடக்கூடிய ஆபத்துண்டு. நோயின் உண்மையான நிலவரத்தை அது போலியாக மறைத்து, இரத்தப் பரிசோதனையில் செங்குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் தொடர்பான பிழையான முடிவை எடுப்பதற்கு வழிவகுக்கலாம்.

எது எவ்வாறாயினும், இந்தக் காலப்பகுதியில் மாத்திரமல்லாது எந்தக் காலப்பகுதியிலும் தாம் சார்ந்த பகுதிகளில் நுளம்புகள் பெருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடப்பாடாகும். நுளம்புகள் முட்டையிட்டு தம்மைப் பெருக்கிக்கொள்ள ஒரு துளி நீர் போதுமானதாகும் எனவே இது தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்கவேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *