
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும், கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமது வகிபாகம் மற்றும் முக்கியத்துவம் குறித்து ரெலோ மற்றும், புளொட் ஆகிய கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசுக் கட்சி தலைமையுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சம்பந்தன், நல்ல கல்விப் பின்புலத்துடன் கூடிய புதுமுகங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதும் அது மாறாத அரசியல் நிலைப்பாட்டுடன் நீடிக்க வேண்டும் என்பதே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்களிடையே ஒரு பொதுவான கருத்தாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு போட்டி கூட்டணியின் உருவாக்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிமையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எந்த பிளவும் இல்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் புதிய உத்திகளுடன் கூட்டமைப்பு முன்னகரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply