
வவுனியா – பூந்தோட்டம், பொது மயானத்திற்கு முன்பாக உள்ள கல்வியற் கல்லூரி பிரதான வீதியில் கழிவுகள் இடப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் அவ் வீதியை பயன்படுத்துவோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமியிடம் வினவிய போது,
குறித்த பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி அவ்விடத்தில் ஒரு அறிவித்தல் பலகை ஒன்றை வைப்பதற்கு முயற்சிசெய்வதுடன், இந்த விடயத்தில் பொதுமக்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கத்திடம் வினவிய போது,
குறித்த பிரச்சினை பல பகுதிகளில் நிலவுகின்றது. கழிவகற்றும் வாகனங்கள் வீடுகளுக்கு செல்லும் போது வீட்டில் இல்லாத சிலர் கழிவுகளை வீதிகளில் வீசி வருகின்றனர்.
தற்போது அதிகமாக சனத்தொகை கூடிய பகுதிகளிலும், கழிவுகள் அதிகமுள்ள பகுதிகளுக்கும் பிரதேச சபையின் கழிவகற்றும் இயந்திரங்கள் சென்றுவருகிறது. எம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் தேவையுள்ள ஏனைய கிராமங்களிற்கும் அதனை அனுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply