
நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக டிசம்பர் 2 முதல் இன்றுவரை 11 இறப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 46,821 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 160,038 பேர் காலநிலையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதுவரையில் முப்பது வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் , 1,169 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மண்சரிவு , வெள்ளம், பலத்த மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊவா மற்றும் கிழக்கு , அனுராதபுரம் , பொலன்நறுவ, ஹம்பாந்தோட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும், சப்ரகமுவ , மேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடுமெனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 50 முதல் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் திருகோணமலை முதல் பலபிட்டிய வரை மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்ட மற்றும் காலி வரையான கடல் பகுதிகளில் பலத்த மழைபெய்யும் என்றும் கூறப்படுகிறது.
காங்கேசன்துறை முதல் நீர்கொழும்பு வரை மன்னார் மற்றும் புத்தளம் வரையான கடற்பகுதிகளில் சில நேரங்களில் காற்றின் வேகம் 50 முதல் 55 கி.மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதியிலிருக்கும் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.
Leave a Reply