
அம்பாறை திருக்கோவில் , தம்பிலுவில்-02 தம்பிமுத்து வீதியில் கட்டடக் கொந்தராத்து பணியில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவரின் பழைய வீடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.
எரிந்த இயந்திரத்திற்கு அடியில் மனித உடலைப் போன்ற ஒரு உருவம் எரிந்து கிடப்பதைப் போன்று காணப்படுவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருவதாகவும் திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த வீடு எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல இலட்சம் பெறுமதியான நெல் அறுவடை இயந்திரமும் எரிந்து நாசமாகியுள்ளது.
அத்துடன் இந்த இயந்திரத்திற்கு அடியில் அடையாளம் காண முடியாத நிலையில் ஒரு உருவம் எரிந்துள்ள நிலையில் அது மனிதனுடையதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு அம்பாறை தடயவியல் குற்றப் பொலிசாருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவ் வீட்டின் பிரதான வாயில் பகுதியில் உள்ள கேட்டில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு உரிமையாளர் அவருடைய வேறு ஒரு வீட்டில் விசித்து வருவதுடன் இவ் வீடானது அவருடைய தொழில் ரீதியான உபகரணங்கள் மற்றும் களஞ்சிய வீடாக பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக வீட்டு உரிமையாளரின் மனைவி தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து திருக்கோவில் பொலிசார் மற்றும் காஞ்சிரம்குடா இராணுவத்தினர், புனராய்வு உத்தியோகத்தர்கள், மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply