ஹைதராபாத் என்கவுன்டர்: உச்ச நீதிமன்றம் நடவடிக்கையை ஆரம்பித்தது

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரைப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரை பொலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது.

இந்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழு 6 மாதங்களுக்குள் தங்களின் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணைக் குழுவில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புராக், மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரேகா, சி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவை நீதிபதிகள் நியமித்துள்ளனர்.

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் மருத்துவர், 4 பேர்கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் லொறி சாரதி முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேரையும் விசாரணைக்காக கடந்த வாரம் சம்பவ இடத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர். அப்போது 4 பேரும் பொலிஸாரைத் தாக்க முயன்றபோது அவர்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது.

என்கவுன்டர் செய்த பொலிஸார் மீது தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, வழக்கறிஞர் பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் தனித்தனியாகப் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *