சாம்பியன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போது பேய் சீசன் சென்று விளையாட்டு சீசன் ஆரம்பித்து விட்டது போல. அந்த வகையில் பிகில், கென்னடி க்ளப் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் சாம்பியன் என்ற ஸ்போர்ட்ஸ் படம், கென்னடி க்ளப் நன்றாக இருந்தாலும் பெரிதாக கைக்கொடுக்காத சுசீந்திரனுக்கு சாம்பியன் கைக்கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

விஸ்வா வடசென்னை பகுதியில் புட்பால் திறமையாக விளையாடுபவர். அவருடைய அப்பா மனோஜ் பாரதிராஜாவும் சிறு வயதில் புட்பால் விளையாடுபவராக தான் இருந்துள்ளார், அவரின் நண்பர் நரேனுடன் இணைந்து பல போட்டிகளில் இருவரும் விளையாடி வருகின்றனர்.

ஆனால், லோக்கல் கவுன்சிலர் ஒருவரின் கட்டளைக்கு மனோஜ் இறங்கி அவருக்கு அடியாளாக தன் வாழ்க்கையை அடிதடி என செல்கின்றார், அதே நேரத்தில் நரேன் புட்பால் தான் வாழ்க்கை என தெரிந்து அந்த பக்கம் செல்ல அவர் கோச் ஆகின்றார்.

இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா அதே கவுன்சிலரால் ஒரு சில காரணங்களால் கொல்லப்பட இந்த உன்மை விஸ்வாவிற்கு தெரியவர, தன் அப்பாவை கொன்றவனை பழி வாங்கினாரா? இல்லை புட்பாலில் சாதித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சுசீந்திரன் என்றாலே ஒரு காலத்தில் நம்பி திரைக்கு செல்லலாம் என்ற நிலை இருந்தது, ஆனால், சமீபத்திய சறுக்கல், இன்று சென்னையில் கூட ஒரு சில காட்சிகள் கூட்டம் இல்லாமல் ரத்தானது குறிப்பிடத்தக்கது, சரி இது ஒரு புறம் இருந்தாலும் சுசீந்திரனுக்கு ஸ்போர்ட்ஸ் என்றாலே கைவந்த கலையாக இருந்து வந்தது.

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா என அசத்திய இவர், கென்னடி க்ளபில் கொஞ்சம் சறுக்கினார், அதை தொடர்ந்து சாம்பியன் கைக்கொடுத்ததா என்றால், வடசென்னை மக்களிடம் எத்தனையோ திறமை உள்ளது, ஆனால், அவர்கள் மீது குத்தப்படும் முத்திரை அவர்களை எங்கு கொண்டு செல்கின்றது என்ற கருத்தை எடுத்துக்கொண்ட விதம் சூப்பர், ஆனால், அவர் அதை கையாண்ட விதமும், எடுத்த கதாபாத்திரங்களும் தான் ஏமாற்றம்.

ஹீரோ விஸ்வா பின்னணியிலேயே ஒரு நீச்சல் வீரர், அதனால், புட்பால் சம்மந்தப்பட்ட காட்சியில் மிக அருமையாக நடித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் நடிப்பு மிகவும் சோதனை, ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் படு செயற்கை, இன்னும் பயிற்சி வேண்டும் விஸ்வா.

நரேன், மனோஜ் பாரதிராஜா மனதில் நிற்கின்றனர், மிருணாளனி படத்தில் ஒரு சில காட்சிகள் வந்தாலும் அழகாக நடித்து சென்றுள்ளார், இன்னும் கூட ஒரு சில காட்சிகள் அவருக்கு வைத்திருக்கலாம், சுஜித்தின் ஒளிப்பதிவு வடசென்னையை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது, அரோலின் இசையின் பின்னணி கலக்கல்.

க்ளாப்ஸ்

வடசென்னை மக்கள் என்றால் வன்முறை, சண்டை என்று மட்டும் இருக்கமாட்டார்கள், அவர்களின் திறமையை காட்ட வேண்டும் என்று எடுத்த கதைக்களம்.

ஒளிப்பதிவு, இசை.

பல்ப்ஸ்

நல்ல களம் என்றாலும், கதாபாத்திரங்கள் எதுவுமே அழுத்தமில்லாமல் போனது, திரைக்கதை பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்தது.

மொத்தத்தில் சாம்பியன் இன்னும் கொஞ்சம் முயற்சி இருந்தால் ஆகியிருக்கலாம்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *