
இந்திய தலைநகர் டெல்லியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், குடியுரிடை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாநிலத்தில், 144 தடை, தடியடி என பொலிசார் போராட்டங்களை கையாண்டு வருகின்றனர்.
1971ல் நடைபெற்ற போரின் போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர்.
இந்நிலையில், அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் அன்றைய காலத்தைத் தொட்டே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, 1971ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தில் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் நினைத்தனர்.
இந்நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், அசாமை சேர்ந்த ஆண்கள் சிலர், இன்று டிசம்பர் 13ம் திகதி இந்திய தலைநகர் டெல்லியில் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Leave a Reply