
தமிழகத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பகிர்ந்த குற்றத்திற்காக கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மொபைல் போனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.க்கு, குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தன.
இது குறித்த ஆய்வில் இறங்கிய எப்.பி.ஐ குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக சென்னைக்கு முதலிடம் எனவும் தெரிவித்தது.
இதையடுத்து குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், பகிரப்படுபவர்கள் ஆகியோரை கைது செய்ய தமிழக பொலிசார் இறங்கினர். அதன் படி ஆபாசப்படம் பார்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேரின் பட்டியல் மாவட்ட வாரியாக தயார் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இன்று திருச்சியில் பாலக்கரை காஜாபேட்டை புதுத் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42) என்பவரை பொலிசார் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பகிர்ந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் குறித்து வெளியான தகவலில், ஐடிஐ முடித்து விட்டு ஏசி மெக்கானிக்காக பணியாற்றிய வந்த கிறிஸ்டோபருக்கு இளமை பருவத்தில் இருந்தே ஆபாசப் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை மட்டும் விரும்பி பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆபாச படங்களை தேடி தேடி பார்த்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த இவர் அதன் பிறகு சரியாக வேலைக்கு செல்லாமல் பேஸ்புக்கில் வெவ்வேறு பெயர்களில் கணக்குகளை தொடக்கி அவற்றில் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார்.
பேஸ்புக், மெசஞ்சர் மூலம் குழு துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஆபாசப் படங்களை அனுப்பி வைப்பது கிறிஸ்டோபரின் வாடிக்கையாக இருந்துள்ளது. மேலும், வாட்ஸ் அப்பில் குழு ஆரம்பித்து அதிலும் ஆபாசப் படங்களை பகிர்ந்துள்ளார்.
அவரது மொபைல் போனை பறிமுதல் செய்த பொலிசார், அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது கிறிஸ்டோபர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67ஏ, 67பி, போக்சோ 13, 14, 15 ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply