
கனேடிய பிட்காயின் வர்த்தகர் ஒருவர் இந்தியாவுக்கு தேனிலவுக்காக சென்ற இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவர் பணத்துடன் தலைமறைவாகியிருக்கலாம் என்ற சந்தேகம் முதலீட்டாளர்களுக்கு எழுந்துள்ளது.
கனேடிய பிட்காயின் வர்த்தகரான Gerald Cotten (30), தனது மனைவியுடன் இந்தியாவுக்கு தேனிலவுக்கு சென்றபோது திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அவர் இறந்ததற்கான மரண சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், Gerald நடத்திவந்த பிட்காயின் நிறுவனத்தில் சுமார் 115,000 பேர் பணம் முதலீடு செய்துள்ளனர்.

அந்த பணத்தை எடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரு பாஸ்வேர்ட் இருக்கிறது, அது Geraldக்கு மட்டும்தான் தெரியும்.
அவரது ஆடிட்டர் ஒருவர் முயற்சி செய்து சுமார் 25 மில்லியன் டொலர்களை மட்டும் மீட்டுள்ளார்.
ஆனால் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை 137 மில்லியன் டொலர்கள். எனவே, முதலீட்டாளர்களுக்கு ஒரு வேளை Gerald இறந்ததாக ஏமாற்றிவிட்டு பணத்துடன் தலைமறைவாகிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அவர்கள் Geraldஇன் உடலை தோண்டி எடுத்து, இறந்ததாக கூறி புதைக்கப்பட்டுள்ளது உண்மையாகவே அவரது உடல்தானா, அவர் எதனால் இறந்தார் என்பதுபோன்ற உண்மைகளை அறிய மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்யுமாறு கனேடிய பொலிசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இதற்கிடையில் Geraldஇன் மனைவி Jennifer Robertson, இந்த கோரிக்கை தன்னை மன வேதனை அடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, அப்படியே இறந்தது தன் கணவன்தான் என்று தெரியவரும் நிலையில், அது எப்படி மீதி பணத்தை மீட்க உதவும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Leave a Reply