
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரியளவில் போராட்டம் நடந்து வரும் நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு இந்திய குடிமகனையும் பாதிக்காது என உறுதி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதோடு தென்னிந்தியாவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம், வன்முறை துரதிர்ஷ்டவசமானது. இவை மிகவும் வருத்தமளிக்கிறது. விவாதம், ஆலோசனை மற்றும் எதிர்ப்பு ஆகியன ஜனநாயகத்தின் அவசியமானவை. ஆனால் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும், பொது சொத்தை சேதப்படுத்துவதும் நமது பண்பாடு இல்லை.
பெரும்பான்மை ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது.
பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும், எம்.பி.க்களும் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்தியாவின் பல நூற்றாண்டு கால இரக்கம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை விளக்குவதாக இந்த சட்டம் உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு இந்திய குடிமகனையும் பாதிக்காது என உறுதி அளிக்கிறேன். இந்த சட்டம் குறித்து இந்தியர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் வந்தவர்கள், இந்தியாவை தவிர போக வேறு இடம் இல்லாதவர்களுக்காக மட்டுமே இந்த சட்டம்.
இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நம்மை பிரித்து, தொந்தரவு செய்யும் யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது.
அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை காக்க வேண்டிய நேரம் இது. வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை யாரும் பரப்பவோ, அவற்றை நம்பவோ வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Leave a Reply