
கிழக்கின் கல்வி வளர்ச்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே தடையாக இருந்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பூ.பிரசாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கிழக்குத் தமிழர்களின் கல்வி இருப்பில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே தடையாக இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
மேலும் கடந்தகாலம் போன்று இந்த ஆட்சியில் துரோகம் செய்வதற்கு எமது கட்சி ஒருபோதும் இடம்கொடுக்காது.
அத்துடன் ஆசிரியர் இடமாற்றத்ததை உடனடியாக நிறுத்த வேண்டும். அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளுக்கு, நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் எதிர்வரும் வாரத்தில் நேரில் அவரை சந்திக்கவுள்ளோம் .
சுமந்திரன், தன்னுடன் அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்து வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது கட்சியில் ஒன்றாக சேர வேண்டும் என்று கேட்கின்றாறே தவிர அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என குறிப்பிடவில்லை.
கிழக்கிற்கும் வடக்கிற்கும் நிலைமை வேறு, அந்தவகையில் நாம் அழைத்து விடுத்துள்ளோம் அனைவரும் எம்முடன் இணைந்து பயணியுங்கள் என்றுதான்.
உண்மையில் அவர் இதயசுத்தியுடன் இதைக் கூறியிருந்தால் இதை பரிசீலிக்க வேண்டும். தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஒதுக்குகின்ற சூழலில், இவ்வாறான கோரிக்கையை அவர் விடுத்துள்ளமையினால் வடக்கு- கிழக்கு அனைத்து தமிழர்களையும் ஏமாற்றுகின்ற ஒருவிதமான யுத்தி எனலாம்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நல்லாட்சியில், ஊடகவியலாளர்கள் முதல் அரச அதிகாரிகள் வரை பழிவாங்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள், முகநூல்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது. கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்துள்ளது.
எனவே இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு வருவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply