
தென்னிலங்கை சர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
ஆனந்தசங்கரி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்திற்குக் காலம் தேர்தல் காலங்களில் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் பங்காளிக் கட்சிகளுக்கு படுகுழி வெட்டுவார்கள்.
பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஒற்றுமையைக் கருதி தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றாக இணைந்து போட்டியிட்டோம். தேர்தல் பிரச்சாரக் காலத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் இருகட்சிகளின் தலைவர்கள் எமது வேட்பாளருக்கு எதிராக கிளிநொச்சியில் பிரச்சாரம் செய்தனர்.
தேர்தல் முடிந்தவுடன் எம்மை நீக்கிவிடத் தீர்மானித்தார்கள். அந்த நேரத்தில் கூட்டமைப்பின் செல்வாக்கு சரிந்திருந்தது. அதை நிமிர்த்துவதற்காகத்தான் விக்னேஸ்வரன் ஊடாக ஒற்றுமை என்ற பதத்தைப் பேசி வாக்குகளை அள்ளினார்கள். அதன்பின்னர் விக்னேஸ்வரனும் நீக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் நான் பகிரங்கமாக விக்னேஸ்வரனிடம் கட்சியை தலைமைதாங்க வாருங்கள் என அழைப்பு விடுத்தேன். அது மட்டுமல்ல நீங்கள் கைகாட்டுபவரை கட்சியின் செயலாளர் நாயகமாக்குவேன் என்றும் கூறியிருந்தேன். அவர் அதற்கு நன்றி கூறி எனது வேண்டுகோளை ஏற்கவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் அவர் வந்திருந்தால் அன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி உருவாக்கப்பட்டிருக்கும்.
இன்று நிலைமை அப்படியல்ல. மாகாண சபைக் காலத்தில் அவரின் மீதான விமர்சனங்கள் எதையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்ற கதைகளும் அடிபடத் தொடங்கிவிட்டன. அதனால் எதையும் செய்யாத நிர்வாகத் திறமையற்ற ஆளுமையற்ற தன்மை போன்ற விமர்சனங்களை இன்று அவர் எதிர்கொள்கின்றார்.
குறிப்பாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளின் குடும்பத்திற்கு எதுவிதமான வாழ்வாதார உதவிகளும் முறையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வடமாராட்சி பகுதிகளில் எனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான முன்னாள் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்கள் வறுமையில் அதுவும் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியின்றி தவங் கிடக்கின்றார்கள்.
உடம்பில் குண்டுச் சிதறல்களைத் தாங்கிக்கொண்டு அன்றாடம் மேசன் வேலை மற்றும் பெயின்டிங் வேலை, தினசரி நாட்கூலி என்று போய்க்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு மாகாணசபை நிர்வாகம் மூலம் ஏதாவது செய்தார்களா? இந்த போராளிகளின் நிலைமையை என்னால் திரட்டப்பட்ட ஆவணங்களின் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.
ஆகவே அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் இருந்தும் எதையுமே செய்யாத தலைமை இனி எதனைச் செய்யும் என்று மக்கள் கேட்கும் அளவுக்கு மாகாணசபை நிர்வாகம் ஆட்டம் கண்டது.
இன்று த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள்.
2004ஆம் ஆண்டு த.வி.கூட்டணியை கூட்டுச்சதி மூலம் வெளியேற்றிவிட்டு 28 வருடங்கள் இயங்காமலிருந்த தமிழரசுக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் புதிதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது என்று நம்பிய காரணத்திற்காக தமிழ்மக்களும் ஆதரித்தார்கள்.
2004ம் ஆண்டு தேர்தலில் எவரையும் வாக்களிக்கவிடாது தடுத்து அனைத்து தேர்தல் ஜனநாயக விழுமியங்களையெல்லாம் மீறி புலிகளின் முழு ஆதரவுடன் வெற்றி பெற்றார்கள்.
அதன் காரணமாகவே புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்று எண்ணிய காரணத்தினால் தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்பும் ஆதரவு அளித்தார்கள்.
இன்று உடம்பில் குண்டுச் சிதறல்களுடன் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் முன்னாள் போராளிகளின் முழு ஒத்துழைப்பால் பதவிக்கு வந்துவிட்டு இன்று அவர்கள் படும் கஷ்டங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு, வானுயர்ந்த வீடுகள், காணிக்கு மேல் காணிகள் வாங்கிக் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.
எனவே ஏமாந்தது போதும். யுத்தம் நடத்திய தரப்பு இப்போது பதவிக்கு வந்துள்ளது. அந்தக் கால கட்டங்களில் நடுநிலையாக நின்று ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளுக்கும், முன்னைய ஜனாதிபதிக்கும் பல கடிதங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்த ஒரே கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும்தான்.
அதனால்தான் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சுதந்திர தின வைபவம் ஒன்றில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் ஆனந்தசங்கரி போன்றவர்கள் கேட்பதையாவது, சிங்கள மக்கள் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
பெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்க முடியும் என்று பிரதமர் தற்போது கூறியுள்ளார்.
பெரும்பான்மை மக்களினது நன்மதிப்பைப்பெற்ற ஒரே தமிழ்த் தலைமை என்ற நிலையில் எம்மால் காலத்திற்குக் காலம் நடுநிலையுடன் தெரிவித்த கருத்துக்களை இன்றும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மதகுருமார்கள், புத்திஜீவிகள் மற்றும் சாதாரண மக்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
எனவே பெரும்பான்மை சமூகத்துடன் பேசக்கூடிய வல்லமையுள்ள ஜனநாயக அமைப்பு நாம் மட்டும்தான். ஏனையவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பக்கம் சார்ந்து செயற்பட்டவர்கள். அவர்களால் நியாயமான கருத்தை முன்வைத்து பேரம்பேச முடியாது.
எனவே வாருங்கள் அனைவரும் கூட்டணியில் இணைந்து செயற்பட்டு, எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைக் காண்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply