
தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ் பேசும் மக்களின் மனங்களை நாங்கள் வெல்ல வேண்டியுள்ளது.
அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை. காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், புலம்பெயர் தமிழ் மக்களும் ஒருபோதும் தமிழ் மக்களின் நலனுக்காக செயல்படவில்லை.
மாறாக அவர்கள் தங்களின் நலனுக்காகவே கடந்த காலங்களில் செயற்பட்டார்கள். நாம் நேரடியாக தமிழ் மக்களுடன் ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கான ஒரு வழியை புதிய அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கம் மக்களின் மனதை வெல்லும் வகையில் செயல்பட்டு வருகின்றது. எனவே தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் ஏதாவது சில திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களின் உணர்வுகள் என்ன, தமிழ் மக்களின் அபிமானத்தைப் காப்பாற்றுவது எப்படி போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய விசேட திட்டமொன்றை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுப்பது அவசியமாகிறது.
விசேடமாக இதற்காக தனியானதொரு அமைச்சை உருவாக்க வேண்டும். அதனூடாகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியமாகிறது.
வடக்கையும் தெற்கையும் இணைக்க வேண்டும். தமிழ் மக்களும், சிங்கள மக்களும் முன்னர் ஒன்றிணைந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். எனினும் 1978ஆம் ஆண்டின் பின்னரே நிலைமை மாற்றமடைந்தது.
இரண்டு சமூகங்களும் இணைந்து புரிந்துணர்வுடன் பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அது கடினமானது அல்ல. அது ஒரு சாத்தியமான விடயம்.
தமிழ் மக்களுடன் நேரடியாக அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட வேண்டும். அதற்காகவே இந்த விடயத்துக்கு தனியானதொரு அமைச்சை உருவாக்குவது சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்.
தன்னுடன் தமிழ்பேசும் மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கருதுகிறார். அதற்கு அவருக்கு இவ்வாறான ஒரு திட்டம் தேவைப்படுகிறது.
அதனை முன்னின்று கொண்டு செல்ல நான் தயாராக இருக்கின்றேன். அந்த பொறுப்பை என்னிடம் தந்தால் நான் அதை சிறப்பாக வழிநடத்தி செய்து முடிப்பேன். வடக்கையும் தெற்கையும் இணைப்பேன்.
இவ்வாறான ஒரு விசேட வேலைத் திட்டத்தை முன்னெடுத்தால் ஒரு வருட காலத்தில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் காணலாம். முதலில் மக்களின் மனதை வெல்ல வேண்டும்.
தமிழ் மக்களுடன் ஈடுபாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே இதனை செய்ய முடியும். தமிழ் மக்களின் அபிமானத்தை நாம் ஏற்க வேண்டும். அதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியம்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்ததும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் அபிவிருத்திகளை செய்தார். அப்போதைய சூழலில் அது சரியாக இருந்தது.
எனினும், தமிழ் மக்கள் திருப்தி அடையவில்லை. எனவே நாம் அந்த மக்களின் அபிமானம் குறித்து பேச வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இவ்வாறு பயணித்தால் முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைவார்கள்.
தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்வதற்கு ஜனாதிபதிக்கு இன்னும் அவகாசம் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply