நாட்டின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்தவர் அரசியலமைப்பை மீறலாமா?

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கருத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நாடு பெளத்த நாடு அல்ல என அவர் முன்வைத்துள்ள கருத்தானது நாட்டின் அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சீ.வீ.விக்னேஸ்வரன் என்பவர் இலங்கையின் அரசியலமைப்பை நன்கு அறிந்தவராவார் எனவும், அவ்வாறான ஒருவர் இப்படியான ஒரு கருத்தை முன்வைத்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும், இலங்கை சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது இவரது அரசியல் நோக்கமா அல்லது நாட்டில் இனவாதத்தை தூண்டும் முயற்சியா என்ற சந்தேகம் எழுவதாகவும் மேலும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கை ஒரு பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்ட புனைகதைகள் என அவர் சுட்டிக்காட்டியிருந்ததுடன் இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவது முற்றிலும் தவறான விடயம் என எனவும், பாலி மொழி மூலம் புனைகதைகளை உருவாக்கி பௌத்த தேரர்களால் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சிங்கள வரலாறுகள் முதல் பௌத்த தேரர்கள் வரை போலியான புனைகதைகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *