வடக்கு – கிழக்கு ரவுடிகளிற்கு பேரிடியான கோட்டாபயவின் உத்தரவு

வடக்கில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, சுமுக நிலைமையை ஏற்படுத்துமாறு வடபிராந்திய பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய.

கடந்த வெள்ளிக்கிழமை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து பேசியிருந்தனர்.

இதன்போது, வடக்கு கிழக்கில் அதிகரித்து வரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஆயர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது, அந்த இடத்திலிருந்தே வடபிராந்திய பொலிஸ்மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய, வடக்கு நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், ஆயர்கள் தெரிவித்த விடயங்களை சுட்டிக்காட்டி, உடனடியாக சட்டம் ஒழுங்கை பேணுமாறும், வாள்வெட்டு, கொள்ளைச்சம்பவங்களை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறும் உத்தரவிட்டார்.

மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளிற்கும் எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென ஆயர்களிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவதற்கு ஏற்ற சூழலை தான் ஏற்படுத்தித் தருவதாகவும் கூறினார்.

வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஆயர்களால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் செயற்திட்டம் ஒன்று நடைபெற்று வருவதாகவும், அதற்கான பணி விரைவில் நிறைவடைந்துவிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக சட்டத்தினூடாக விரைவுபடுத்தி வழக்குகளை உடனடியாக நிறைவுசெய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆயர்களிடம் கோட்டாபய தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *