
பின்லாந்தின் 34 வயதான புதிய பிரதமரை கேலி செய்ததற்காகவும், அவருடைய நிர்வாகத்திறனை கேள்விக்குட்படுத்தியதற்காகவும் எஸ்தோனியா மன்னிப்பு கோரியுள்ளது.
34 வயதான சன்னா மரின் சமீபத்தில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றத்தை அடுத்து, உலகின் இளம்வயது பிரதமர் என்கிற பெருமையினை பெற்றார். அவருடைய ஐந்து கூட்டணி தலைவர்களில் நான்கு பேர் 35 வயதுக்குட்பட்ட பெண்கள்.
அவரது அமைச்சரவையை பலரும் வியந்து பாராட்டி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று எஸ்தோனிய உள்துறை அமைச்சரும், ஜனரஞ்சக தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவருமான மார்ட் ஹெல்ம் (70) வானொலி ஒன்றில் பேசுகையில், சன்னா மரினை “ஒரு விற்பனை பெண்” என கேலி செய்திருந்தார்.

மேலும், அவரது அமைச்சரவையில் தெரு ஆர்வலர்களும், படிக்காதவர்களும் சேர்ந்திருப்பதாக விமர்சனம் செய்தார்.
இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை பதவி விலகுமாறும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து எஸ்தோனிய ஜனாதிபதி கெர்ஸ்டி கல்ஜுலைட், பின்லாந்து ஜனாதிபதி சவுலி நைனிஸ்டோவிடம் மரின் மற்றும் அவரது அரசாங்கத்திடம் மன்னிப்பு கோருவதாக திங்களன்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ஒரு பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த சமூக ஜனநாயகக் கட்சியின் மரின், பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கும் அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் முன்பு காசாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply