
அவுஸ்திரேலியாவில் விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்ற சகோதரர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூலை 2017ல் சிட்னியில் இருந்து அபுதாபிக்கு செல்லும் எட்டிஹாட் ஏர்வேஸ் விமானத்தை, இறைச்சி அரைக்கும் சாதனத்தில் வெடிகுண்டு மறைத்து வெடிக்க திட்டமிட்டிருந்த இரண்டு அவுஸ்திரேலிய-லெபனான் சகோதரர்கள் சிக்கினர்.
விசாரணையில் ஐ.எஸ் கட்டளையின் படி இருவரும் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம் இன்று நவம்பர் 17ம் திகதி தீர்ப்பளித்துள்ளது.
கலீத் கயாத்துக்கு 2047 வரை பரோல் இல்லாமல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவரது சகோதரர் மஹ்மூத் கயாத்துக்கு 2044 வரை பரோல் கிடைக்க வாய்ப்பில்லாமல் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜூலை 2017ல் அபுதாபிக்கு செல்லும் விமானத்தில், வெடிகுண்டு மற்றும் இரசாயன வாயு என இரண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக இருவருமே குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது.
மே மாதத்தில் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தால் கலீத் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார், ஆனால், மஹ்மூத்துக்கு எதிராக தீர்ப்பளிக்க நீதிமன்றத்தால் முடியவில்லை. அவரது விசாரணையும் செப்டம்பர் மாதம் குற்றவாளி என்ற தீர்ப்புடன் முடிந்த நிலையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் பொலிஸ் சோதனைகளுக்குப் பின்னர் கலீத் மற்றும் மஹ்மூத் கயாத் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவால் இயக்கப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உயர் தர வெடிபொருட்கள் துருக்கியிலிருந்து அனுப்பப்பட்டதாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் தெரிவித்தனர்.
Leave a Reply