
கட்சிக்கு புதிய முகங்கள் வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று(திங்கட்கிழமை) குருநாகல் மாவட்டத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது சரியான முறையில் வேலை செய்தால் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு பெற வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். ஒன்றிணைந்து வேலை செய்யாவிட்டால் வெற்றி பெற முடியாது.
நாம் கிராமங்களுக்கு செல்ல முடியாது என கூறும் அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருப்பார்களாயின் அவர்களை விலக்கிவிட்டு புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.
மேலும் மதகுருமார்கள், மத்திய வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு இன்றி நமக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாது.
கட்சிகளுக்கும் தனி நபர்களுக்கும் இடையிலான போட்டி இங்கு காணப்படுகின்றது. அதற்கு தீர்வினைக்கண்டால் நமக்கு அவர்களின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன், கட்சிக்கு புதிய முகங்கள் மற்றும் தலைவர் தேவைப்படுகின்றார். 2025 ஆம் ஆண்டாகும்போது நாம் பலமான கட்சியாக இருக்க வேண்டும். அதற்கு கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply