சமஸ்டி இல்லை என்றாலும் அதிகாரப்பகிர்வு வேண்டும் – சுமந்திரன்

சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை என்றாலும் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிகார பகிர்வு தொடர்பில் அவர் சொல்லும் கருத்துக்கள் நமது மக்கள் அவருக்கு வாக்களிக்காம விட்டது சரி என்பது தெளிவாகின்றது.

அவருக்கு ஆதரவு தெரிவித்த டக்ளஸ் தேவானந்த உள்ளிட்டோர் முகத்தை எங்கே வைக்க போகிறார்கள். இனியும் அமைச்சரவையில் இருப்பதா என்பதனை அவர் யோசிக்க வேண்டும்.

யுத்தம் முடிந்ததும் முழுமையான அதிகார பகிர்வை வழங்குவோம் என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வாக்குறுதி வழங்கியே அவர்களின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.

ஆனால் தற்போது வரை அது வழங்கப்படவில்லை. தற்போது அவரது தம்பி ஜனாதிபதியான நிலையில் அதிகார பகிர்வு வழங்க முடியாது என கூறியுள்ளார். பெரும்பான்மையினர் ஏற்காத எதனையும் செய்ய முடியாது என சொல்கின்றார்.

நாட்டின் அதிகாரம் ஒரே இடத்தில் இருந்தால் அது பெரும்பான்மையானவர்களுக்கே நன்மை. அரசியல் தீர்வு விடயத்தில் சிறுபான்மையினர் எதனை விரும்புகின்றார்களோ அதனையே கொடுக்க வேண்டும். அதன் ஊடாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

சிறுபான்மையினரை அடக்கியாள ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அதேவேளை எம்மை அடக்கியாள முனையும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *