
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய சந்தேக நபரை எதிர்வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 04ம் திகதி வரை பயங்கரவாத தடை பிரிவின் தடுப்பு காவலில் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை மினுவாங்கொட நீதவான் நீதிமன்றுக்கு பயங்கரவாத தடை பிரிவினர் இன்றைய தினம் சமர்ப்பித்தனர்.
மேலதிக விசாரணைக்காக தொடர்ந்தும் அவர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தருமாறு பயங்கரவாத தடை பிரிவினர் நீதிமன்றில் கேட்டுக்கொண்டதை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வாழைச்சேனை, ஓட்டமாவடி மிராவுட் என்ற இடத்தை சேர்ந்த இருபத்தி ஏழு வயதுடைய ஹக்கீம் முஹம்மது ரிஷ்தான் என்பவரையே இவ்வாறு தடுத்துவைத்து விசாரணைகள் முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் போதே குறித்த சந்தேக நபர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மூன்று பேர் குடிபோதையில் இந்த திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்கள்.
இதன்போது கைது செய்யபட்ட தமிழர்களான குறித்த சந்தேக நபரின் நண்பர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவழக்கு விசாரணை விதிகளின் 125வது சரத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முஸ்லீம் நபரின் கையடக்க தொலைபேசிகள் இரண்டும், 11 தொலைபேசி சிம் அட்டைகள் மற்றும் இரண்டு மெமரி அட்டைகளை கொண்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Leave a Reply