
நல்லாட்சியின் கீழ் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதியை பெறுவதற்கான ஒப்பந்தங்களை, ஆட்சி மாற்றத்தின் பின் தோட்ட நிர்வாகம் பறிமுதல் செய்து வருவதாகவும், இது அமைச்சரவை தீர்மானத்தை மீறும் செயலாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
கண்டியிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரமுகர்களுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நிலவுரிமையற்றவர்களாக வாழ்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் பசுமை பூமி திட்டத்தின் கீழ் 7 பேர்சஸ் காணிக்கான ஒப்பந்தங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதன்படி கண்டி மாவட்டத்திலேயே அதிகளவானோருக்கு காணி உறுதியைப் பெறுவதற்கான முதற்கட்ட ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது. சுமார் 4000 பேருக்கு இவ்வாறு பத்திரங்கள் வழங்கப்பட்டன. 3000 பேருக்கு வழங்குவதற்கான அளவீட்டு பணிகளும் இடம்பெற்றிருந்தன.
எனினும், ஆட்சிமாற்றத்தின் பின்னர், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி ஒப்பந்தத்தை மீளப்பெறும் முயற்சியில் சில தோட்ட நிர்வாகங்கள் இறங்கியுள்ளன.
கண்டி மாவட்டத்தில் கிரேட்வெலி, லிட்டில்வெலி, தெல்தொட்ட ஆகிய தோட்டங்களில், தொழிலாளர்களிடமிருந்து ஒப்பந்தங்கள் மீள பெறப்பட்டுள்ளன.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட கொள்கை திட்டத்தை தோட்ட நிர்வாகங்கள் எவ்வாறு மீறலாம்?
அதுவும் அரச தோட்ட நிர்வாகங்களுக்கு தன்னிச்சையாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கியது யார்? இந்த விடயம் தொடர்பில் பெருந்தோட்டதுறை அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
தோட்டத்தொழிலாளர்களின் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி வழங்கியிருந்தார்.
ஆனால், அவரது ஆட்சி நடைபெறும் காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உறுதியை பெறுவதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மீளப்பெறப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.
தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் பழிவாங்கப்படுகின்றனரா என்ற சந்தேகமும் எழுகின்றது.
இந்த விடயத்தை தேசிய முக்கியத்துவம் மிக்க பிரச்சினையாக கருதி ஜனாதிபதியும், அரசாங்கத்தில் பங்காளிகளாகவுள்ள தொழிற்சங்கங்களும் – தொழிலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நாமும் எம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply