
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க.தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தி.மு.க.தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க.அரசு மக்களவையிலும், மாநிலங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் முஸ்லிம் சமுதாயத்தினரையும், ஈழத் தமிழா்களையும் புறக்கணிக்கிறது என்றும் கூறி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது தி.மு.க.எதிர்த்து வாக்களித்தது.
சட்டத் திருத்தத்தைக் கண்டித்து தி.மு.க.சார்பில் மாவட்டந்தோறும் போராட்டமும் நடைபெற்றது. மேலும் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
அத்துடன் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தலாமா அல்லது கண்டனப் பேரணி நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படவுள்ளது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply