
மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியது தவறானது. ஆனால், தேவையில்லாத சிலர் வன்முறையில் ஈடுபடும்போது தங்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கலாம் என பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்ட மூலத்துக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
மேலும், குறித்த சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதுபொலிஸார் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் எதிரொலியாக டெல்லியில் கடந்த இரு நாட்களாகப் போராட்டத்தில் 100 தனியார் வாகனங்கள், 10 பொலிஸார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த சூழலில் பா.ஜ.க எம்.பி. கவுதம் கம்பீரிடம், டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “என்னைப் பொறுத்தவரை மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியது தவறு. ஆனால், அசம்பாவிதங்கள் நடந்து வன்முறை ஏற்பட்டால் பொலிஸார் தங்களைப் பாதுகாக்கத் தடியடி நடத்துவதில் தவறில்லை.
மேலும், குடியுரிமைச் சட்டம் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாகவும், இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குமே தவிர குடியுரிமையைப் பறிக்காது”என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply