
சீரற்ற காலநிலை காரணமாக 2 ஆயிரத்து 62 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அவர்களுள் ஆயிரத்து 94 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 875 பேர் 37 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து பல கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தெதுறு ஓயா, கலா ஓயா, மீ ஓயா மற்றும் கிரிந்தி ஓயா நீர்தேக்கங்களினதும் அம்பன் கங்கையினதும் நீர்மட்டம் உயர்வடையக்கூடும் என திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார்.
மேலும் மகாவலி கங்கையின் நீரேந்தும் பகுதியில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் மகாவலி கங்கையின் இரு பகுதிகளிலும் அதன் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதேவேளை வெலிமடை, ரேந்தபொல, அம்பேவல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 12 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அதேபோல ஹப்புத்தளை பிட்டாத்தமலை கீழ் பிரிவில் நெடுங்குடியிறுப்பில் வசித்து வந்த 23 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் பிட்டாத்தமலை கீழ்பிரிவு பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை. இன்றைய தினமும் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply