
யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தை கட்டடத் தொகுதியின் மலசலக்கூடத்தில் கட்டணம் அறவீடு செய்பவரை நகர பழக்கடை வியாபாரிகள் இருவர் தாக்கியதால், அவர்களைக் கைது செய்யக் கோரி மாநகர சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் அறவிடப்படுகிறது.
இந்நிலையில், மலசல கூடத்தை பயன்படுத்திய நகர பழக்கடை வியாபாரி இரண்டாவது தடவை பயன்படுத்துவதால் கட்டணம் செலுத்த முடியாது என்று மாநகர ஊழியருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டதுடன், அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து சக ஊழியர் ஒருவர் நியாயம் கேட்கச் சென்றபோது மற்றொரு வியாபாரி அவரைத் தாக்கியதாகவும் மாநகர ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரத் தொழிலாளிகள் இன்று (சனிக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
தம்மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றபோதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுகாதாரத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை அறிந்த கடற்றொழில் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகருக்கு வந்து ஆராய்ந்த பின்னர், தாக்குதல் நடத்திய வியாபாரிகளை கைது செய்யுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply