
அமெரிக்காவுடன் நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், உயர் இராணுவ அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே ஜூன் 2018 முதல் மூன்று முறை சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதேசமயம் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என வடகொரியா கூறி வருகிறது.
அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் வடகொரியா அளித்த உறுதிமொழியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், பொருளாதாரத்தடையும் நீக்கம் பெறாமல் தொடர்ந்து வருகிறது.
இதனால் சமீபத்திய வாரங்களில் வடகொரியா வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளில், ‘கிறிஸ்துமஸ் பரிசு’ என்கிற பெயரில் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விட்டது.
அது என்னவென்று தெரியாத நிலையில், சக்திவாய்ந்த ஏவுகணை சோதனையாக இருக்கலாம் என அமெரிக்காவின் விமானப்படை உயர் அதிகாரி எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், நாட்டின் இராணுவ திறனை உயர்த்துவது குறித்து விவாதிக்க வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உயர் இராணுவ அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தியதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய இராணுவ ஆணையத்தின் விரிவாக்கப்பட்ட கூட்டத்திற்கு கிம் தலைமை தாங்கியுள்ளார்.
அந்த கூட்டத்தில், “நாட்டின் ஒட்டுமொத்த ஆயுதப்படைகளையும் … இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கபட்டுள்ளது”.
கூட்டம் எப்போது நடைபெற்றது அல்லது என்ன முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.
இதுகுறித்து சில வல்லுநர்கள், தனிமைப்படுத்தப்பட்ட வடகொரிய அரசு ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு தயாராகி கொண்டிருக்கலாம் எனக்கூறியுள்ளனர்.
Leave a Reply