
எம்.சி.சி ஐ முழுமையாக கிழித்தெறிய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கிரில்லவல நகரில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘காலநிலை மற்றும் வானிலை மாற்றத்தால், புவியின் வெப்பநிலை காரணமாக ஒசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வருடாந்தம் கடல் மட்டம் அதிகரித்துச் செல்வதால் எமது நாட்டிற்கு என்ன நேரப்போகின்றது? இவை அனைத்தும் மிகவும் ஆழமான சிந்திக்க வேண்டிய விடயங்கள்.
இவ்வாறான விடயங்களை எதிர்நோக்குவது தொடர்பாக நாட்டில் சிறந்த கொள்கையொன்றை வகுத்தல் வேண்டும். சூழலுக்கு மாத்திரமன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் எதிர்காலத்திற்கும் இது அவசியம்.
எவ்வாறான நாட்டை நாம் நிர்வகிக்கின்றோம்? எவ்வாறான நாட்டை கையளிக்கின்றோம் என்பது தொடர்பாக கவனம் தேவை. வரையறுக்கப்பட்ட தரமான 60 வீதமான சந்தைக்கு எமது ஏற்றுமதி முன்னெடுக்கப்படுகின்றது.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டின் காலநிலை தொடர்பான நிகழ்ச்சிநிரலை அடிப்படையாக வைத்து, அச்சுறுத்தல் விடுக்கக்கூடும். இதன்போது ஏற்றுமதிக்கும் தடைகள் விதிக்கக்கூடும்.
எங்களுடைய ஏற்றுமதியின் பல்வகை தன்மை பேணப்பட வேண்டும். எம்.சி.சி உடன்படிக்கையின் ஊடாக இந்த நாடு அமெரிக்காவுக்கு அடிமையாகவுள்ளது என கூறப்படுகின்றது.
69 இலட்சம் வாக்குகளைப் பெற்றபோது இதனை கூறவில்லை. அப்போது கூறிய விடயங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
எம்.சி.சி முழுமையாக கிழித்தெறிய வேண்டும். எக்சாவை கிழித்தெறிய வேண்டும். சோபா உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும்.
தேவை என்றால் சிங்கப்பூர் – இலங்கைக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கையையும் முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply