திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறல்!

மாவட்டங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 150 முதல் 200 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. பல்வேறு இடர்களில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.

நிலவும் சீரற்ற வானிலையால் 7 ஆயிரத்து 565 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 11 ஆயிரத்து 916 பேர் 90 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பலத்த மழையுடனான வானிலையால் பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், கேகாலை, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் 47 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 054 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, அதிக மழையினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உரித்தான 43 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வான்பாய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 84 வீதமாக காணப்படுவதாக நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார்.

இங்கினிமிடிய, தப்போவ, இராஜாங்கனை, நுவரவௌ, மஹகனதராவ, நாச்சதுவ, தெதுருஓயா, லுணுகம்வெஹர, பராக்கிரம ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர, யான் ஓயா, அங்கமுவ, வெஹெரகல, ரம்பகென்ஓய, மஹதிவுல்வௌ, உன்னிச்சை, சொரபொர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *