மட்டக்களப்பில் நீரில் மூழ்கியுள்ள கிராமங்கள்: முப்படையினரின் உதவியுடன் மீட்பு நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் சில பகுதிகளில் முப்படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், கித்துள், வேப்பவட்டுவான் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கி வருவதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து ஆகாய மார்க்கமாகவும் மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்பகுதியில் இருந்து 73பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் மாவடியோடையூடாக மீட்புப் பணிக்காக உழவு இயந்திரத்தில் இயந்திரப்படகு கொண்டுசென்றபோது உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதன்போது அதில் பயணித்த மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர் ஒருவர் உட்பட எட்டு பேர் படையினரால் மீட்கப்பட்டனர்.

இதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரம்படித் தீவு , முறுக்கன் தீவு, சாராவெளி, அம்புஸ்குடா போன்ற கிராமங்களில் வெள்ள நீர் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகு மூலம் வெளியேற்றும் பணிகளில் படையினரும், அனர்த்த அபாயக் குறைப்புப் பிரிவினரும் பிரதேச இளைஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேற்று மாலை நேரடியாக நின்று தேவையான உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவந்தார்.

மீட்கப்பட்ட இவர்கள் இயந்திரப்படகு மூலம் கொண்டுவரப்பட்டு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஓர் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *