
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கன மழையினால் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் யாவும் திறந்துவிடப்பட்டுள்ளதுடன் குளத்தில் நீர் நிரம்பி வான் பாய்ந்தவண்ணம் உள்ளது.
மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள முள்ளாமுனை வீதி கரவெட்டி- மகிழவட்டவான் வீதி போன்ற வீதிகளை ஊடறுத்து வௌ்ள நீர் பாய்ந்து செல்கின்றது. இந்த வௌ்ளப் பெருக்கினால் தாள் நிலத்திலுள்ள வயல் நிலங்கள் யாவும் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, உறுகாமம் குளத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சந்திரசேகரன் நிறோஜன் தெரிவித்துள்ளார். இதன்படி, உறுகாமம் குளத்தின் 2 வான் கதவுகள் 8 அடிக்கு திறந்தவிடப்பட்டுள்ளன.
இதனிடையே, மாதுறுஒயா ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பல கிராமங்களை பெரு வெள்ளம் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்குண்ட கிராம மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களை ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதிலும் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Leave a Reply