
வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒன்றுதிரண்டு விரட்டினர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் குடத்தனை வடக்குப் பகுதியில் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கில் சட்டத்துக்கு புறம்பாக அதிகளவு டிப்பர்களில் மணல் கடத்தல்கள் கடந்த ஒரு வாரமாக இடம்பெற்று வந்தது.
பொலிஸாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் குடத்தனை மக்கள் நேற்று அங்கு திரண்டனர்.
மணல் அகழ்வில் ஈடுபட்டு டிப்பர் வாகனங்களில் கடத்த முற்பட்டவர்களை மக்கள் விரட்டியடித்தனர்.
மணல் கடத்தல்காரர் சவல்களால் மணல் அகழ்வில் ஈடுபட்டபடியால் அங்கிருந்து டிப்பர்களில் தப்பித்தனர்.
மணல் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பித்த நிலையில் ஊர்மக்கள் மணல் அகழ்வில் ஏற்பட்ட பள்ளங்களை நிரப்பி அங்கிருந்து சென்றனர்.
இதேவேளை, வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலைத் தடுப்பதற்காக இரவு பகல் என சுழற்சிமுறையில் விழிப்புக்குழுக்களாகச் செயற்பட மக்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெறுவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படப் போகும் பாதிப்பைத் தடுப்போம் என வலியுறுத்தி இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் வளம் மிகவும் சுதந்திரமான முறையில் சூறையாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண் வளத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி பின்பு தென்மராட்சி, தீவகம் – மண்கும்பான் பகுதிகளிலும் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Leave a Reply