
தமிழகத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கைப்பற்றிக் கொண்டு தந்தையை மகனே நடுத்தெருவில் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சிம்சன்ராஜ். 75 வயதான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
அதில் மூத்த மகனுக்கு திருமணம் முடிந்ததால் தனிகுடித்தனம் சென்றுவிட, மனநலம் பாதித்த மற்றொரு மகன் விக்டர் ஞானராஜுடன் மூன்றாவது மகன் வால்டர் செல்வராஜ் வீட்டில் வசித்து வந்தார்.
சிம்சன்ராஜூக்கு சொந்தமான 13 வீடுகள் கொண்ட குடியிருப்பு, கடைகள் உள்ள வளாகம் இருப்பதால், மாதந்தோறும் அதில் இருந்து வரும் லட்சக்கணக்கான வருமானத்தால் பணத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் வால்டர் செல்வராஜ், சுமார் ஒரு கோடி மதிப்புடைய அத்தனை சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு தன்னையும், தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனையும் துரத்தி விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் குறைத்தீர்ப்பு முகாமில் சிம்சன்ராஜ் மிகவும் வேதனையுடன் மனு அளித்துள்ளார்.
மேலும் அவர், தங்குவதற்கு கூட இடமில்லாமல் மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் சாலையோரம் தஞ்சம் அடைந்திருப்பதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து விசாரித்த மாவட்ட ஆட்சியர், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வுச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதோடு, சிம்சன்ராஜுவுக்கும், அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வால்டர் செல்வராஜுவுக்கு உத்தரவிட்டார்.
அதையும் கொடுக்க முடியாது என கூறியதால், அவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கும் படி பரிந்துரைக்கப்பட்டதால், தனது மனைவியுடன் வால்டர் செல்வராஜ் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் பொலிசார், கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பிடுங்கிக்கொண்டு பெற்ற தந்தையையும் மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரனையும் தெருக்கோடியில் விட்ட வால்டர் செல்வராஜ், நிச்சயம் இருவரையும் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
Leave a Reply