
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் உயிழப்புக்கள் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்கள் தொடர்பாக உடனடிக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் இந்த அவசரக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் உரிய ஒரேயொரு போதனா வைத்தியசாலையாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உள்ளது.
இங்கு வைத்திய வசதிகள் உயர் நிலையில் காணப்பட்டபோதும் அங்கு கடமை புரியும் வைத்தியர்கள் சிலரின் அசமந்தப் போக்குகள், அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச மருத்துவ சேவையைப் பெற வருகின்ற நோயாளர்கள் மீதான அலட்சியப் போக்குகள் போன்றவற்றால் கடந்த ஆறு மாதங்களுக்குள் 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பெரும்பாலான வைத்தியர்கள் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் நேரத்தை விட கூடுதலான நேரத்தை தனியார் வைத்திய நிலையங்களில் செலவிடுகின்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதனால் இலவச மருத்துவ உதவி பெற அரச வைத்தியசாலைக்கு வரும் மக்களுக்கு அவசர அவசரமாக அரைகுறையாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதோடு, தவறான சிகிச்சைகள் வழங்கப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பு வைத்தியசாலையை தங்கள் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து வைத்தியர்களின் இவ்வாறான அசமந்தப் போக்குகளை இல்லாதொழித்து அப்பாவி மக்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இனிவரும் காலங்களில் அரச வைத்தியர்கள், தனியார் வைத்திய நிலையங்களில் கடமையாற்றுவதை தடுத்து மனித உயிர்களைக் காப்பாற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply