8ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத் தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் ஜனாதிபதி அரச கொள்கை பிரகடனத்தை முன்வைத்ததன் பின்னர், பிற்பகல் 12.30 இல் இருந்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் சபை நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
அதற்கமைய ஜனவரி மூன்றாம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தொடரின்போது புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்க உள்ளதுடன், அதேபோல் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக அன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
Leave a Reply