
அனைத்து இடங்களிலும் சிசிடிவி கமெரா பொருத்தப்பட்டுள்ளதால் தன் மீது துஷ்பிரயோக வழக்கு போட முடியாது என சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார்.
துஷ்பிரயோக புகார், சிறுமிகளை கடத்தியது என பல்வேறு புகார்களில் பொலிசார் ஒருபுறம் தேடிவந்தாலும், தினமும் சமூக வலைதளத்தில் தனது சத்சங்கத்தை நித்தியானந்தா நிகழ்த்தி வருகிறார்.
பஞ்ச் வசனம், சாடல், சாபம் என சத்சங்கம் நிகழ்ச்சியை கொமடி கலாட்டாவாக நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தும் நித்தியானந்தா, நேற்றும் அதே பாணியில் தனது உரையை நிகழ்த்தினார்.
ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்க வேண்டும் என தமது பாணியில் அவர் விளக்கம் அளித்தார்.
பல விடயங்களில் ஜெயித்த போராளி தான் என்றும் நெத்தியடி போல் நித்தியடி கொடுக்க வேண்டும் என தனது சீடர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
நித்தியடி என்றால் என்ன என்பதையும் அதிரடியாக விளக்கினார்.
பலாத்கார வழக்கில் தான் ஏற்கனவே கைது செய்யப்பட்டபோது நிகழ்ந்தவற்றை விவரித்த நித்தியானந்தா, தன்னை கைது செய்த பிறகே புகார் தருபவர்களை கூவி கூவி பொலிசார் தேடியதாக கூறினார்.
மேலும் 2002ம் ஆண்டிற்கு முன்பு தான் எந்த வழக்கும் தன் மீது போட முடியும் என்றும் அதன் பின்னர் எந்த வழக்கும் போட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால் தாம் இருக்கும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எந்தவிதமான பெண்கள் தொடர்பான துஷ்பிரயோக வழக்கும் போட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சிசிடிவி கமெராக்கள் பற்றி நித்தியானந்தா தற்போது இப்படி பேசினாலும், அதே சிசிடிவி கமெராவில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போல பதிவான காட்சியால் தான் முதன் முதலில் நித்தியானந்தா சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply