
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளைவான் கடத்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ராஜிதவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் 6ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொலை, வெள்ளை வான் கடத்தல், சித்திரவதை, கொள்ளை உள்ளிட்ட தகவல்களை வெளிப்படுத்திய விவகாரத்தில் இருவரை சி.ஐ.டி. கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.
அந்த விவகாரத்தில் கைதான இருவரும் அவர்கள் ஊடக சந்திப்பில் கூறிய விடயங்களை திருத்தி மீளக் கூற முற்பட்டால் உண்மையிலேயே வெள்ளை வானில் செல்ல நேரிடும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன அச்சுறுத்தியதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக சி.ஐ.டி. நீதிமன்றிற்கு அறிவித்தது.
இது குறித்த விசாரணைகளை சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் அசங்கவின் கீழ் விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே ராஜித சேனாரட்ன தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மூன்று முன் பிணை மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் அவை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜிதவை கைத செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply