
வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண் ஊழியரை தாக்கிய இளைஞர் தண்டிக்கப்படுவதுடன் நகரசபைக்கு சொந்தமான குறித்த கடையினை சபை மீள பெறவேண்டும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “நகரசபைக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள கடையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தாய் இளைஞர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த கடையை நடத்துபவரின் மகனால் இச்சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சம்பவம் தொடர்ச்சியாக குறித்த நபரால் மேற்கொள்ளபடுவதை அறியும்போது பேரதிர்ச்சியாக இருப்பதுடன் கோபமூட்டுவதாகவும் அமைந்துள்ளது.
பாரதூரமான அடிப்படை மனித உரிமை மீறலான இச்சம்பவத்தை குறித்த வட்டாரத்தின் நகரசபை உறுப்பினர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன். குறித்த குற்றவாளி சட்டத்திற்குட்பட்டு கடுமையாக தண்டிக்கபடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
அக்கடை அமைந்துள்ள காணியானது நகரசபைக்கு சொந்தமான காணியாக இருப்பதால் காணிக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்து நகரசபை குறித்த காணியை மீளப்பெறநடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் அடுத்த சபை அமர்வில் அதற்கான தீர்மானத்தை கொண்டுவரவுள்ளேன் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன்.
மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் வவுனியாவில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்களின் மூலம் இந்த ஒற்றுமை வலுவிழந்து போகும் சூழ்நிலையும் எற்படலாம்.
எனவே இனமத பேதங்களை கடந்து குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டியதுடன், குறித்த நகரசபை காணியினை மீளப்பெற சபையிலுள்ள மூவினத்தையும் சேர்ந்த உறுப்பினர்களும் நான் கொண்டுவரும் தீர்மானத்தினை ஏகமனதாக ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply