
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான வெர்னோன் பிளெண்டர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளார்.
34வயதாகும் வெர்னோன் பிளெண்டர், சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறபோவதாக அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து அவர் கூறுகையில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று இதன்மூலம் அறிவிக்க விரும்புகிறேன்.
விளையாட்டில் மிகச் சிறந்தவர்களுடன் விளையாடியது மற்றும் பல ஆண்டுகளாக சிறந்த டெஸ்ட் அணியின் ஒரு பகுதியாக இருந்தது ஒரு மரியாதை மற்றும் பாக்கியம்.
ஒரு அற்புதமான பயணம் என்ன என்பதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சரியான நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் சி.எஸ்.ஏ, கேப் கோப்ராஸ், அனைத்து பயிற்சியாளர்கள், நிர்வாகம், அணித்தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சிறப்பு ரசிகர்களுக்கும் நன்றி’ என கூறினார்.
1985 ஜூன் மாதம் 24ஆம் திகதி தென்னாபிரிக்காவின் பெல்வில்லி நகரில் பிறந்த வெர்னோன் பிளண்டர் 2004ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் முதல்தர போட்டியில் அறிமுகமானார்.
இதன்பிறகு தனது 22ஆவது வயதில் 2007ஆம் ஆண்டு முதல் முறையாக அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச அறிமுகத்தை பெற்றுக் கொண்டார்.
தான் விளையாடிய முதலாவது சர்வதேச போட்டியிலேயே 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அனைவரினதும் கவத்தை ஈர்த்த பிளெண்டர், அதே ஆண்டு செப்டம்பரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ரி-20 சர்வதேச அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதன்பிறகு கடந்த 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார்.
ஸ்வீங் முறையில் பந்துவீசும் திறமைக் கொண்ட பிளெண்டரால், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நிலைத்து நிற்க முடியவில்லை. அவர் இறுதியாக 2015ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
எனினும், தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியில் முக்கிய வீராகவும் அசைக்க முடியாத வீரராகவும் திகழ்ந்த பிளெண்டர், தற்போது வயது மற்றும் உடற்தகுதி ஆகிய காரணங்களை முன்னிறுத்தி தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற பிளெண்டருக்கு தற்போது இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், இரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூகவலைதளங்களின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு சொந்தக்காரரான பிளெண்டர், அதிகவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர், வேகமான 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இந்த சாதனையை அவர் 19ஆவது டெஸ்ட் போட்டியில் எட்டினார்.
இதுதவிர, 912 புள்ளிகளுடன் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்திலும் இருந்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்தைப் பிடித்த அணியின் ஒரு வீரராகவும் முத்திரை பதித்த அவர், 2012ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஜெக் கல்லீஸின் ஓய்வுக்குப் பிறகு கல்லீஸின் இடத்தை நிரப்பிய வீரராக பிளெண்டர் பார்க்கப்படுகிறார்.
இதுவரையில் 60 டெஸ்ட் போட்டிகளில் 8 அரைச்சதங்களுடன் 1,619 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 13 ஐந்து விக்கெட்டுக்களுடன் 216 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.
இதுதவிர 30 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 41 விக்கெட்டுக்களையும், 7 ரி-20 சர்வதேச போட்டிகளில் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச மற்றும் 3 போட்டிகள் கொண்ட ரி-20 சர்வதேச தொடர்களில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் தொடரின் முதல்போட்டி, பொக்ஸிங் டே அன்று சென்சுரியனில் நடைபெறவுள்ளது.
Leave a Reply