செஞ்சோலை அமைந்திருந்த காணிகளை ஒப்படைக்குமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை அமைந்திருந்த தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு சென்று அங்கு முகாம்களில் வாழ்ந்து வந்தோம். யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் எமது காணிகளில் குடியேறுவதற்காக வந்தபோது அக்காணிகளில் படையினர் முகாம் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் படையினர் குறித்த முகாம்களை அகற்றி காணிகளை விடுவித்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஆதரவுடன் அக்காணிகள் செஞ்சோலையில் இருந்து வளர்ந்தவர்கள் என குறிப்பிட்ட அளவிலான குடும்பங்களிற்கு  பகிர்ந்தளிக்கப்பட்டன.

நாங்கள் உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் எமது கையில் உள்ளன. இத்தனை ஆவணங்களையும் மீறி குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தோம். காணிகளை எமக்கே வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரச அதிகாரிகளை பணித்துள்ளது.

இந்த நிலையில் நாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம். எமது காணிகளை எமக்கு பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தம்மிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் காணி விடயம் தொடர்பாக ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி, அமைச்சர்கள், அதிகாரிகள் கவனம் செலுத்தி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும்” என அவர்கள் குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *