
நீண்ட நாட்களுக்கு பின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு வந்த தங்களுடைய மகனை, உத்திரபிரதேசத்தில் நடந்த வன்முறையின் போது பொலிஸார் சுட்டுகொன்றுவிட்டதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாஹ்ரோஸ் என்கிற இளைஞர் மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர் இருவரும் சொந்த ஊரில் தங்கியிருந்தனர்.
நவம்பர் 20ம் திகதி தன்னுடைய 22வது பிறந்தநாள் வருவதையொட்டி, பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக ஷாஹ்ரோஸ் யாரிடமும் கூறாமல் ட்ரக்கில் இரண்டு நாள் பயணமாக சொந்த வீடு வந்து சேர்ந்தார்.
அன்றைய தினம் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையானதால் 15க்கும் அதிகமானோரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். அதில் ஒருவராக ஷாஹ்ரோஸ் பலியாகினார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து பேசியுள்ள ஷாஹ்ரோஸின் தந்தை முகமது யமீன், நீண்ட நாட்களுக்கு பின் எங்களுடைய மகன் பிறந்தநாளன்று திடீரென வீட்டிற்கு வந்ததால் நாங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தோம்.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னர், நானும் என்னுடைய மகனும் பிற்பகல் மசூதிக்கு சென்றோம். அப்போது நாங்கள் வசிக்கும் பகுதியில் வன்முறை வெடித்ததால், ட்ரக்கை சேதமில்லாமல் தவிர்க்க பாதுகாப்பான் இடத்திற்கு மாற்றுமாறு பக்கத்துக்கு வீட்டு நபர் கூறினார்.
உடனே என்னுடைய மகன், மாலை 4.30 மணியளவில் ட்ரக்கை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்காக சென்றான்.
சிறிது நேரம் கழித்து, என் மகன் துப்பாக்கிசூட்டிற்கு பலியாகி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாக போன் வந்தது. மருத்துவமனைக்கு விரைந்த போது, தோட்டா அவனுடைய வயிற்று பகுதியில் பாய்ந்து இறந்துகிடந்தான்.
ஷாஹ்ரோஸ் இறந்து கிடப்பதை பார்த்ததும், அவனது தாயார் ரிஸ்வானா பேகத்திற்கு கண்களில் இருந்து உருளும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என பொலிஸார் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது பிரேத பரிசோதனையில் தோட்ட பாய்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply